மார்க்ஸ் மூலதனத்தை (Capital) "Dead Labour" அதாவது உயிரிழந்த (அல்லது) உயிரற்ற உழைப்பு என்கிறார். அவர் ஏன் இதனை அப்படி அழைக்கிறார்? அப்படியானால் உயிருள்ள உழைப்பு என்று ஒன்று உள்ளதா?
இதனை புரிந்துக் கொள்ள முதலில் மார்க்ஸ் முன்வைக்கும் "Labour Theory of Value" என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பண்டத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். முதலில் என்ன தேவை?
- அதற்கான மூலப் பொருட்கள்,
- உற்பத்திக்கு உதவும் கருவிகள் மற்றும் சாதனங்கள்.
- இடம், மின்சாரம், மேலும் சில.
இவை பண்டத்தை உற்பத்தி செய்வதற்கு முன்பே இருந்தால் மட்டுமே பண்டத்தை உற்பத்தி செய்யும் பணியில் இறங்க முடியும். எனவே இந்த மூலப்பொருட்களும், கருவிகளும், சாதனங்களும் கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு தேவைப்படும் ஒன்றாக மாறுகிறது.
கடந்த கால உழைப்பாளிகளின் உழைப்பால் உண்டான இந்த மூலப்பொருட்களும், கருவிகள் மற்றும் சாதனங்களைத் தான் ஒரு முதலாளி மூலதனம் என்ற பெயரில் பணப்பரிவர்தனை மூலம் நிகழ்காலத்திற்கு கொண்டு வருகிறார். இந்த பரிவர்தனை மூலம் இன்றைய முதலாளிக்கு எந்த ஒரு புதிய மதிப்போ, இலாபமோ உருவாகவில்லை, ஆனால் கடந்தகால உழைப்பை சந்தையில் விற்கும் அந்த முதலாளிக்கு இலாபம் உண்டாகியிருக்கும். இது ஏன் என்று பிறகு பார்ப்போம்.
தற்சமயம் நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது, பண்டத்தை இனிமேதான் உற்பத்தி செய்ய வேண்டிய முதலாளியை பொருத்த வரை கொடுத்த பணத்திற்கு ஈடான சிலவற்றை பெற்றுக்கொண்டாரே தவிர, அதற்கு அதிகமாக அவரிடம் எதுவும் வந்து சேரவில்லை.
இந்த மூலப்பொருட்களும், கருவிகளும், சாதனங்களும் கடந்த கால உழைப்பை உள்ளடக்கிக் கொண்டிருப்பதால் அதுவே அப்பொருட்கள் மற்றும் சாதனங்களின் மதிப்பாக (value) மாறியது. உழைப்பே இங்கு மதிப்பை உருவாக்குகிறது. இந்த மதிப்பின் மேல் தான் பயன் மதிப்பு (use-value) மற்றும் பரிவர்தனை மதிப்பு (exchange-value) என்ற பிற மதிப்புகள் சந்தையில் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன. இதுவே "Labour Theory of Value" எனப்படுகிறது.
இந்த கடந்தகால அல்லது உயிரற்ற உழைப்பை பயன்படுத்தி ஒரு பண்டத்தை உற்பத்தி செய்ய ஒரு முதலாளிக்கு, தொழிலாளிகள் தேவைப்படுகிறார்கள். இத்தொழிலாளிகளின் உழைப்பே "living labour" அல்லது நிகழ்கால உழைப்பு (அல்லது) உயிருள்ள உழைப்பு எனப்படுகிறது. வெறும் கடந்தகால உழைப்பை பணத்திற்கு பரிவர்தனை செய்து வாங்கிவிட்டால் மட்டும் புதிய பொருட்களோ, மதிப்புகளோ உருவாகிவிடாது. தொழிலாளர்கள் உழைப்பினால் தான் புதிய மதிப்புள்ள பொருட்களாக அவை மாறுகின்றன.
இப்புதிய பண்டம் அல்லது பொருளானது சந்தைக்கு எடுத்துச் செல்லப்படும். அது மீண்டும் வேறொரு முதலாளிக்கு தேவைப்படும் ஒரு மூலப்பொருளாக இருக்கலாம் (அல்லது) அவற்றை மீண்டும் உழைக்கும் மக்களிடமே விற்றாக வேண்டும். இப்படி சந்தையில் அதனை விற்கும் போதுதான் அதற்கு என்ன விலை இந்த முதலாளி நிர்ணயிக்கிறார் என்பதைப் பொறுத்து, உபரி மதிப்பு (surplus value) என்பதை அவரே உணர முடியும்.
எடுத்துக்காட்டாக, இந்த பண்டத்தை உற்பத்தி செய்ய ஆகிய மொத்த செலவு (தொழிலாளியின் சம்பளம் உட்பட) ரூ. 10 என்றால், அவர் அதனை அதே விலைக்கு சந்தையில் விற்க முடியாது. அப்படி அவர் அதே விலைக்கு விற்றால் அது அந்த பண்டத்திலிருக்கும் உழைப்பின் மதிப்பை அதே அளவில் பரிமாறிக் கொண்டதாக அர்த்தம், அதனால் முதலாளிக்கு கூடுதலாக எதுவும் கிடைக்கவில்லை. அல்லது முதலாளிக்கு சம்பளம் வரவில்லை என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.
எனவே இந்த பண்டத்தின் பரிவர்தனை மதிப்பு சந்தையில் கூடுதலாகவே முதலாளி விற்கிறார். ரூ.12 என்று வைத்துக்கொள்வோம். இப்படி 2 ரூபாய் அதிகமாக ஒவ்வொரு பண்டத்திலிருந்தும் எடுத்துக்கொள்ளும் முதலாளி, இதை தனக்கான வரவாக கைப்பற்றிக் கொள்கிறார்.
இவரிடம் 5 தொழிலாளிகள் வேலை செய்கின்றனர், 5 தொழிலாளிகள் ஓவ்வொருவரும் தலா 1 பண்டத்தை உற்பத்தி செய்தார்கள் என்று எடுத்துகொண்டால்... 5 பண்டம் உருவாகியிருக்கிறது.
விற்பனைக்கு முன்
முதலாளியின் செலவு (நிகழ்கால உழைப்பிற்கு மட்டும்)
- 1 தொழிலாளிக்கு கூலி = ரூ. 2/-
- 5 தொழிலாளிக்கு கூலி = ரூ. 10/-
ரூ. 8/- கடந்தகால உழைப்பான மூலப்பொருட்களுக்கும், சாதனத்திற்கும்.
முதலாலியிடம் இருப்பு
- ரூ. 50/- மதிப்புள்ள 5 பண்டங்கள்
தொழிலாளியின் செலவு
- தங்கள் வாழ்நாளில் ஒரு நாளின் 'x' மணி நேரம் மற்றும் உழைக்கும் சக்தி.
தொழிலாளியிடம் இருப்பு
- 1 தொழிலாளியிடம் ரூ. 2/-
- 5 தொழிலாளியிடம் ரூ. 10/-
சந்தையில் விற்பனை
ரூ. 2/- ஏற்றி விற்கிறார் முதலாளி
- 1 பண்டத்தின் சந்தை விலை = ரூ. 12/-
- 5 பண்டத்தின் சந்தை விலை = ரூ. 60/-
விற்பனைக்கு பின்
முதலாளியின் வரவு
- 1 பண்டத்தால் = ரூ. 2/-
- 5 பண்டத்தால் = ரூ. 10/-
முதலாளியிடம் இருப்பு
- ரூ. 10/-
ஒரு தொழிலாளியின் வரவு
- 1 பண்டத்தை தான் உருவாக்கியிருப்பார் = ரூ. - 2/-
தொழிலாளிகளின் மொத்த வரவு
- 5 பண்டம் கூட்டாக = ரூ. - 10/-
ஒரு தொழிலாளியிடம் இருப்பு
- ரூ. 2/-
விற்பனைக்கு முன்னும் பின்னும், தொழிலாளர்களின் இருப்பு மாறாமல் இருக்கிறது, ஆனால் முதலாளியின் இருப்பு மட்டும் அதிகரித்துள்ளது. எப்படி? இந்த அதிகரிப்பு எங்கிருந்து வந்திருக்க முடியும்? முதலாளி ஓவ்வொரு தொழிலாளிக்கும் சேர வேண்டிய ரூ. 2/-, 5 தொழிலாளிகளிடமிருந்து கைப்பற்றி ரூ. 10/- வரவு பெற்றார். அப்படியெனில் ஒரு தொழிலாளிக்கு சேர வேண்டிய உண்மையான கூலி என்பது ரூ. 2/- அல்ல, ரூ. 4/-.
ரூ. 10/- ல் முதலாளி ரூ. 2/- எடுத்துக்கொண்டு, மீதமுள்ள ரூ. 8/- மறுமுதலீடு செய்தோ அல்லது, வேறு வழிகளில் பெருக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ரூ. 2/- மட்டுமே இருப்பு வைத்திருக்கும் தொழிலாளிக்கோ சுதந்திரமாக செயல்படும் மாற்று வழி இல்லாததால் கூலி அடிமை முறையில் சிக்கிக் கொள்கிறார். ஒரு முதலாளி மனதளவில் நல்லவராக இருக்கலாம் என்றாலும் மூலதனம் விடாது, ஏனெனில் இங்கே அவர் ஒருவர் மட்டும் இத்தொழிலில் ஈடுபடவில்லை, போட்டிக்கு மேலும் சில முதலாளிகளும் உள்ளனர். எனவே முதலாளி வர்க்கத்திர்க்கு தொழிலாளியை சுரண்டி வாழ்வதை தவிர வேறு வழியில்லை.
இங்கே கடந்தகால உழைப்பை, நிகழ்கால மதிப்பாக மாற்றியது எது? நிச்சயமாக மூலதனம் இல்லை, ஏனெனில் மூலதனம் தான் அந்த கடந்தகால மதிப்பே! அது மதிப்பை கூட்டவும் இல்லை, குறைக்கவும் இல்லை. தொழிலாளிகள் உற்பத்தியில் ஈடுபடும் போது தான் புதிய மதிப்பே உருவாகிறது. ஆனால் அதனை சந்தையில் நடக்கும் பரிவர்த்தனை மூலம் தான் அந்த முதலாளியே உணர முடியும்.
கடந்தகால உழைப்பை சந்தையில் விற்கும் அந்த முதலாளிக்கு இலாபம் உண்டாகியிருக்கும். இது ஏன் என்று பிறகு பார்ப்போம்.
முன்பு மேலே குறிப்பிட்ட இந்த வாக்கியத்திற்கு இப்போது பொருள் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். கடந்த கால உழைப்பின் சந்தை விலையை அந்த முதலாளி இந்த முதலாளிக்கு ரூ. 2/- அதிகமாக விற்றிருக்கிறார். நிகழ்கால உழைப்பை பயன்படுத்திக் கொண்ட இந்த முதலாளி அவரிடம் இழந்த ரூ. 2/- மீண்டும் சந்தையிலிருந்தே பெற்றிருக்கிறார். இது எதைக் குறிக்கிறது? -2 + 2 = 0. சந்தையில் ஒரு பணடத்தின் மதிப்பு மாறவே இல்லை. ஆனால் பரிவர்த்தனை மதிப்பு (அல்லது) சந்தையில் பண்டத்தின் விலை மற்றும் உயர்ந்துள்ளது. இது தான் பணவீக்கம் (inflation) எனப்படுவது.
நீங்கள் சொல்வது படி பார்த்தால் முதலாளிக்கு எதுவுமே கிடைக்காதே! ஆம், கடந்தகால உழைப்பை நிகழ்காலத்திற்கோ (அல்லது) எதிர்காலத்திற்கோ தேவையான ஒன்றாக மாற்றியதில் முதலாளியின் உழைப்பு என்ன?
கடந்த கால உழைப்பை கைப்பற்றி வைத்திருந்த ஒரு முதலாளியிடமிருந்து இவர் கைப்பற்றி வைத்துக் கொண்டார். ஏன்? ஏனெனில் மீண்டும் தொழிலாளர்களின் உழைப்பால் உண்டாகும் மதிப்பை சந்தையிலிருந்து கைப்பற்றத் தான். இது இரத்தத்தை மெல்ல உரிஞ்சும் அட்டைப் பூச்சி செயல் தானே? ஒவ்வொரு தொழிலாளியும் தான் பெறும் சம்பளம் அல்லது கூலியோடு சேர்த்து உட்கார்ந்து சாப்பிடும் முதலாளியின் கூலிக்கும் சேர்த்து உழைக்கிறார்கள்.
முதலாளியும் தொழிலாளர்களோடு சேர்ந்து பொருள் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தால், கைப்பற்றிய கடந்தகால உழைப்பு என்பது முதலாளிக்கு மட்டும் சொந்தமில்லை, உழைக்கும் நிகழ்கால தொழிலாளர்களுக்கும் சொந்தமென்றால், சந்தையிலிருந்து வரும் உபரி மதிப்பு என்பது மீண்டும் அனைத்து தொழிலாளர்களுக்குமே செல்லும். இதுவே கூட்டுறவு முறையிலான உற்பத்தி என்பது. உற்பத்தி முறையை மாற்றியமைக்காமல் சுரண்டலை ஒழிக்க முடியாது.