குடும்பம் என்றால் என்ன என்று நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். சமூகத்தில் ஒரு காலக்கட்டத்தில் உருவாகிய அமைப்பு முறை. மனித சமூகத்தில் குடும்பம் என்னும் அமைப்பு எப்போது தோன்றியது என்பதை காலத்தால் நம்மால் இந்த தேதி, இந்த இடம், இந்த நேரம் என்று துல்லியாமாக கூறமுடியாது. ஆனால் அது ஏன் தோன்றியிருக்க வேண்டும் என்பதை வேண்டுமானால் நாம் அறிந்துக் கொள்ள முடியும். அப்படி அறிந்துக்கொள்ள வேண்டுமாயின் இன்றைய நவீன தொழில்நுட்பமும், தலைமுறை தலைமுறையாய் வளர்ந்து வந்திருக்கும் நம் அறிவுக்களஞ்சியமும் இல்லாத காலத்திற்கு செல்ல வேண்டும்.
ஏனெனில், நாம் இன்றைக்கு ஒரு முடிவு எடுத்தால் கூட நாளை அது எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்து எடுக்கிறோமோ, அப்படித்தான் அன்றைக்கும் அவர்கள் நினைத்திருக்க வேண்டும். அன்றைக்கு சமூகத்தில் நிலவியிருந்த ஒரு மாபெரும் தேவையை பூர்த்தி செய்யவே குடும்பம் தோன்றியிருக்க வேண்டும். அத்தேவை இன்றும் நீடிப்பதால் தான் நாம் இன்னும் குடும்பம் என்னும் அமைப்பில் இருந்து வருகிறோம். (இதைப் பற்றி மேலும் படிக்க, ஏங்கல்ஸ் எழுதிய "குடும்பம், தனிச்சொத்து மற்றும் அரசின் தோற்றம்" என்ற நூலை அணுகவும்).
இது என்றென்றைக்கும் நீடித்து இருக்கும் என்று நீங்களும், நானும் ஆசைப் பட்டாலும், அடம்பிடித்தாலும் அதன் தேவை குறையும் போதோ அல்லது எப்படி சமூகத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு அன்று தேவைப்பட்டதோ, அதேபோல் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு அது முட்டுக்கட்டையாக இருக்கும் பட்சத்தில் அது நீர்த்துபோகும். அது எப்படி தானாக உருவாகி வளரவில்லையோ, அதேபோல் தானாக நீர்த்தும் போகாது. அது உருவானதற்கும், நீர்த்துப்போவதற்கும் ஏற்ற சூழல்களும், சமூகத் தேவைகளும், சமகால சிந்தனைகளும், அதில் இயங்கும் மனிதர்களும் இணைந்து கூட்டாகவே இவற்றை நிர்ணயிக்கின்றன.
குடும்பம் என்கின்ற அமைப்புமுறை, கடந்து வந்த பண்ணை அடிமை முறை, நிலப்பிரபுத்துவம், மற்றும் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவம் ஆகிய அமைப்புகளுக்கள் எப்படி வெவ்வேறாக மாறி வந்திருக்கிறது, இதில் ஆண்களின் இடமும், பெண்களின் இடமும் எவ்வாறு மாறி வந்திருக்கிறது, எந்த அமைப்பு முறையில் யாருக்கு ஆதிக்கம் இருந்துவந்துள்ளது போன்ற விவாதம் நாம் அறிந்ததே. அதிலும் இடதுசாரி இயக்கங்களில் தொடக்கம் முதலே இவ்விவாதங்களும், நேற்றைய, இன்றைய குடும்பத்தில் நிலவி வந்துள்ள, வருகின்ற அசம்த்துவத்தையும் அகற்றி எப்படி சமத்துவமான குடும்பத்தையும், சமூகத்தையும் கட்டமைப்பது போன்ற கருத்துக்கள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன. Alexandra Kollantai எழுதிய "கம்யூனிசமும் குடும்பமும்" (Communism and the Family) என்கிற கட்டுரை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
ஒரு ஆணையும் பெண்ணையும் இணைக்கும் திருமணம் என்னும் ஏற்பாட்டில் இருந்துதான் குடும்பம் என்னும் அமைப்பிற்கு அச்சாரம் போடப்படுகிறது. ஒன்று கூடும் ஆணும் பெண்ணும் மறுஉற்பத்தியில் ஈடுபட்டு அக்குடும்பத்தை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும் என்பதே சமூக விதி. அப்படி வைத்திருக்க வேண்டுமாயின், வாழ்வதற்கு தேவையான பொருள் ஈட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இந்த இடத்தில் தான் தற்போது நிலவும் அரசியல் பொருளாதாரத்தின் தேவையும், அதன் வளர்ச்சிக்கு சமூகத்தில் உள்ள எந்த விதிகள் உதவுகிறது அல்லது முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பது தீர்மானிக்கப்படுகிறது. இவை ஒரு சிலரால் தீர்மானிக்கப்படுவதில்லை, ஓரிரு இரவில் மாறிவிடுவதும் இல்லை. இவை அனைத்தும் பண்பாடு மற்றும் கலாச்சார மாற்றங்கள், இவற்றிற்கு மக்கள் தயாராகாமல் யாராலும் இவற்றை நடைமுறைபடுத்திவிட முடியாது.
இந்த மாற்றத்திற்கு மிகவும் உதவும் ஒரு வடிவம் தான் கலை மற்றும் இலக்கியம். குறிப்பாக சினிமா, நாடகங்கள், பாடல் வரிகள் போன்றவை. இம்மூன்றையும் கூர்ந்து கவனியுங்கள் உங்களுக்கு தானாகவே விளங்கும். நாளைய குடும்ப அமைப்பிற்கு அப்படி ஒரு மாற்றம் தேவை என்பதால் தான் சமீப காலமாக live-in together பற்றி நிறைய படைப்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்திய அளவில் திருமணம் என்றால் பெண் தான் அவள் வீட்டைவிட்டு வெளியேறி, அந்த ஆணின் குடும்பத்தோடு சேர்ந்து வாழவேண்டும் என்ற சமூக விதி இருக்கிறது. பெண் விடுதலை பேச தொடங்கும் யாரும் எழுப்பும் முதல் கேள்வி இதுகுறித்து தான் இருக்கும். அப்படி கேள்வி எழுப்பவதற்கு ஏற்ற சூழலும் உருவாகியிருக்க வேண்டும், உதாரணத்திற்கு பெண்களுக்கு கல்வியறிவு, வேலைவாய்ப்பு, சொத்துரிமை போன்றவை அங்கீகரிக்கப்பட்ட பிறகு தான் இப்படி கேள்வி எழுப்ப முடியுமே தவிர அவை அங்கீகரிக்கப்படாத சமூகத்தில் இக்கேள்விகளை எழுப்ப முடியாது.
தினசரி வாழ்நாளை எப்படி கழிக்கிறோம் என்பதில் இன்றைய முதலாளித்துவத்தின் பங்கு மிகவும் அதிகம். முதலாளித்துவ பொருளாதாரம் அதன் தேக்கநிலையை கடக்க ஏற்கனவே பல மாற்றங்களை செய்யத் துவங்கி விட்டது. அதன் saturated நிலையிலிருந்து, அடுத்த நிலைக்கு செல்ல யார் அதற்கு உதவுகிறார்களோ அவர்களை மட்டும் வளர்த்தெடுப்பதுதான் venture capital / angel investor backed startups. ஆனால் நிலவி வரும் குடும்ப அமைப்புகளோடு venture capital startups-யும் ஒருசேர வளர்த்தெடுப்பதில் முதலாளித்துவவாதிகளுக்கும் சவாலாக இருக்கிறது. "நான் ஒரு Startup தொடங்கியிருக்கேன், அல்லது தொடங்கப்போகிறேன்" என்று சொல்லும் இளைஞர் இளைஞிகளிடம் அவர்கள் பெற்றோர்களின் எதிர்வினை என்னவாக இருக்கிறது என்று கேட்டுப்பாருங்கள். ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் அவை பொதுவான எதிர்வினையாய் ஆகிவிடாது. குடும்பம் திருமணம் என்று வரும்பொழுது பொருளாதார, சமூக பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால் முதலாளித்துவம் அதன் நெருக்கடியிலிருந்து மீண்டு வர அடுத்த நிலையை அடைய ரிஸ்க் எடுக்கும் ஆட்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். இதனாலேயே இந்த முரண்பாடு நிலவுகிறது.
live-in என்றால் வெறும் காமத்தோடும், உடலுறவுகளோடு மட்டும் சுருக்கிவிட வேண்டாம். அப்படி வேண்டுமானால் அது தோற்றமளிக்கலாம், ஆனால் முற்போக்காக அணுக வேண்டுமென்றால் ஏற்கனவே பெற்றோர்கள் ஓரிடத்திலும், பிள்ளைகள் வேரிடத்திலும் படிக்கவும், வேலை செய்யவும் மறுப்புத் தெரிவிக்காத சமூகம், பெண் வீட்டிற்கு ஆண் போவதா, இல்லை ஆண் வீட்டிற்கு பெண் போவதா என்பதை அவரவர் இருக்கும் இடத்திலேயே இணைந்து துணையாய் வாழ தொடங்குவதாய் எடுத்துக் கொள்ளலாம். ஒரு படைப்பு அதை வெறும் இச்சை தீர்த்துக் கொள்வதாய் சித்தரிக்கலாம், மற்றொரு படைப்பு நுணுக்கமான ஆண்-பெண் உறவு குறித்து அழகாக சித்தரிக்கலாம் (ஓகே கண்மனி). அதற்கு ஏற்ற சூழலும் cosmopolitan நகரங்கள் உருவாகி மெட்ரோ என்கிற அவசரமான, நவீனமான, பிசியான இடம் இல்லாமல் இதுவும் சாத்தியமில்லை. இது இடது, வலது என்று பேரமில்லாமல் இரண்டு தரப்புகளுக்கும் தேவைப்படும் ஒரு மாற்றமாக நான் கருதுகிறேன். குடும்பம் என்கின்ற அமைப்பு காணாமல் போகிறது என்று எடுத்துக்கொள்ளவில்லை, ஆனால் அதில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது என்று தான் கூற விரும்புகிறேன்.
பண்பாடு, கலாச்சாரம், கலை, இலக்கியம், பொருளாதாரம், அரசியல், அறிவியல், ஆன்மீகம் இவற்றில் எது எதை தீர்மானிக்கிறது எது முதலில் செயல்படுகிறது என்று நிறுத்திவைத்து பார்க்க இயலாது. இவை அனைத்துமே அனைத்தின் மீதும் தாக்கம் செலுத்துகிறது, அதே நேரம் அவற்றால் தாக்கம் அடைகிறது.
"இவ்வுலகத்தில் எதுவும் நிலையானதும், இறுதியானதும் அல்ல. அனைத்துமே மாற்றத்திற்கு உட்பட்டதே!"
- இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் (Dialectical Materialism) ஒரு விதி.