Index ¦ Archives ¦ Atom

கொரில்லா ஓப்பன் ஆக்சஸ் அறிக்கை

Aaron Swartz published Guerilla Open Access Manifesto back in 2008 when he was alive. This is my attempt to translate the english version to Tamil.

தகவல் அறியும் உரிமை என்பதும் ஒரு வித அதிகாரம். அனைத்து அதிகாரங்களைப் போலவும், இதை பெற்றிருக்கும் ஒரு சிலர் அந்த அதிகாரத்தை தங்களுக்குள் வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இந்த உலகின் ஒட்டுமொத்த அறிவியல் மற்றும் கலாச்சார பாரம்பரியம் தொடர்பான புத்தகங்களும், இதழ்களும் தொடர்ந்து தனியார் நிறுவனங்களால் அதிக அளவில் எண்மருவியாக்கம் (டிஜிட்டல் வடிவில் மாற்றம்) செய்யப்பட்டு அவர்களிடம் சிக்குண்டுக் கிடக்கிறது. அறிவியலின் சிறந்த ஆராய்ச்சிகளின் முடிவுகளையும் அதன் ஆராய்ச்சி முறைகளையும் படிக்க வேண்டுமா? அப்படியானால் ரீடு எல்சீவியர் (Reed Elsevier) போன்ற தனியார் வெளியீட்டாளர்களுக்கு பெருந்தொகையை கட்டணமாக செலுத்து வேண்டும் முதலில்.

இந்த அவல நிலையை மாற்ற சிலர் போராடுகின்றனர். அதில் ஒன்று தான் ஓப்பன் ஆக்சஸ் (Open Access) இயக்கம். ஓப்பன் ஆக்சஸ் மூலம் ஒரு விஞ்ஞானி அல்லது ஆராய்ச்சியாளர் தனது உழைப்பின் பலனாக உருவாக்கிய ஆவணத்தின் பதிப்புரிமையை மொத்தமாக இந்த தனியார் வெளியீட்டாளர்களிடம் எழுதிக் கொடுக்காமல், இணையத்தில் அனைவராலும் இலவசமாக பதிவிறிக்கம் செய்யக் கூடிய வகையில் பதிவேற்றம் செய்யலாம். இது அனைத்தும், புதியதாக வெளியிடும் ஆவணங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே, தனியாரிடம் சென்றுவிட்ட ஆவணங்களுக்கு இது பொருந்தாது என்பதால், பல இலட்சம் ஆவணங்கள் இதுபோல் சிக்குண்டுக் கிடக்கின்றன. இவை அனைத்தையும் மீட்டெடுக்க நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பெருந்தொகையை செலவிட வேண்டும். அது சாத்தியமற்றதும் கூட.

ஆராய்ச்சியில் ஈடுபடுவோர், தன் சக ஆராய்ச்சியாளரின் முடிவுகளைப் படிக்க பணம் கட்டச் சொல்லி கட்டாயப்படுத்துதல் நியாயமானதா? ஒட்டுமொத்த நூலகத்தையும் எண்மருவியாக்கம் செய்து பின் கூகுளில் இருப்போருக்கு மட்டும் அனுமதி வழங்குதல் நியாமா? வளர்ந்த நாடுகள் என்று கருதப்படும் நாடுகளிலுள்ள மேட்டுக்குடி பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கி, வளர்ந்துவரும் அல்லது மூன்றாம் தர நாடுகள் என்று கருதப்படும் நாடுகளில் உள்ள மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பல்கலைக்கழகங்களுக்கு ஆவணத்தை அணுகும் அனுமதி மறுக்கப்படுவதை நாம் எவ்வாறு ஏற்றுக் கொள்வது?

"எனக்கு புரிகிறது, ஆனால் நாம் என்ன செய்ய முடியும்? இந்த தனியார் நிறுவனங்கள் பதிப்புரிமையை தங்களிடம் தக்கவைத்துக் கொண்டு அதன் மூலம் பெரும் தொகையை இலாபமாக சம்பாதிக்கின்றனர். அதுவும் சட்டபூர்வமாக. இவர்களை தடுக்க நம்மிடம் ஒன்றுமில்லை.", என்று பெரும்பாலானோர் சொல்கின்றனர். நம்மால் முடியும் என்கிறேன் நான். நாம் ஏற்கனவே அதை செய்துகொண்டும் இருக்கிறோம். நம்மால் இவற்றை மீட்டெடுக்க முடியும்.

இந்த தனியார் வெளியீட்டாளர்களிடம் சிக்குண்டு கிடக்கும் ஆவணங்களுக்கு அணுகல் பெற்றுள்ள மாணவர்கள், நூலகர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களே, உங்களுக்கு இந்த சிறப்புரிமை வழங்கப்பட்டுள்ள இதே நேரத்தில் உலகின் பல பகுதியுள்ள மக்கள் அணுகல் கிடைக்காமல் அறிவொளியற்ற இருட்டறையில் பூட்டப்பட்டிருக்கின்றனர். தார்மீக ரீதியில் உங்கள் மனசாட்சி உங்களை கேள்வி கேட்குமானால் நீங்கள் பெற்றுள்ள இந்த சிறப்புரிமையை நீங்கள் உங்களோடு மட்டும் வைத்திருக்க தேவையில்லை. இந்த அவல நிலையை மாற்ற நீங்கள் இந்த உரிமையை பிறருக்கும் பகிர வேண்டும். இந்த அணுகலுக்கான கடவுச்சொல்லை உங்கள் சக நண்பர்களோடு பகிர்ந்திருப்பீர்கள் அல்லது அவர்களுக்காக நீங்கள் பதிவிறக்கம் செய்து கொடுத்திருப்பீர்கள். உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி அதில் உள்ள ஓட்டைகளையும் கண்டறிந்து அவ்வப்போது ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்துள்ள இந்த சிறப்புரிமையை உடைக்க முயற்சி செய்கிறீர்கள். ஆனால் இம்முயற்சிகள் அனைத்தும் இருட்டில் நடப்பது போல் யாருக்கும் தெரியாமல் நடந்துக்கொண்டிருக்கிறது. தலைமறைவாக செய்வதுபோல் உள்ளது.

இந்நிறுவனங்கள் யாவும் அறிவுசார் சொத்துரிமை என்னும் பெயரில், 'பைரசி' என்ற சொல்லாடல் மூலம் நம்முடைய இச்செயல்களை திருடர்களுக்கு, கொள்ளையர்களுக்கு இணையாக ஒப்பிடுகின்றனர். அறிவைப் பெருக்கும் இந்த ஆவணங்களை பகிர்தல் என்பது எப்படி திருட்டு அல்லது கொள்ளையோடு ஒப்பிட முடியும்? பிறரோடு பகிர்தல் என்பது சமூக விரோத செயல் அல்ல, மாறாக பகிர்தல் என்பது மனிதனின் தவிர்க்கவியலாத ஓர் தார்மீக குணமாகும். பேராசையினால் கண்கள் கட்டப்பட்டவர்கள் தான் இது போன்ற பகிர்தலை மறுக்க முடியம். பெரும் கார்ப்ரேட் நிறுவனங்களின் பேராசை அவைகளின் கண்களை குறுடாக்கியுள்ளது என்பதில் துளியும் சந்தேகத்திற்கு இடமில்லை. இந்நிறுவனங்களை இயக்கும் விதிகளுக்கு பேராசை அடிப்படை தேவையாகிறது, எனவே அதன் பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள் இந்த மாற்றத்தை விரும்பமாட்டார்கள். ஒரு சில அரசியல் பிரதிநிதிகளை விலைக்கு வாங்கி அவர்கள் மூலம் இவர்களின் இயக்க விதிகளை பொதுச்சட்டமாகவும் மாற்றுகின்றனர்.

அநியாயம் செய்வதில் யாரும் நியாயம் கற்பிப்பது ஏற்கமுடியாது. அதுபோல அநீதியான சட்டங்களை பின்பற்றுவதில் எந்த நீதியும் இருக்க முடியாது. இந்த அநீதியான சட்டங்களுக்கும் விதிகளுக்கும் கீழ்படியாமல், ஒத்துழைப்பு அளிக்காமல் நாம் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வரவேண்டும். அனைவருக்கும் பொதுவான அறிவு சார்ந்த பொது கலாச்சாரத்தை கையகப்படுத்தி பூட்டி வைக்கும் இந்நிறுவனங்களை எதிர்க்கும் நமது நிலைப்பாட்டை வெளிப்படையாக, பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்.

எங்கெல்லாம் அறிவுசார்ந்த ஆவணங்கள், தகவல்கள் பூட்டப்பட்டிருக்கிறதோ வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவற்றையெல்லாம் நாம் பிரதி எடுத்து இணையத்தில் இவ்வுலகத்தோடு பகிர வேண்டும். பதிப்புரிமை காலாவதியாகிப் போன அல்லது பொதுவுடைமை ஆக்கப்பட்ட ஆவணங்கள், புத்தகங்கள், இதழ்கள் என அனைத்தையும் நாம் எடுத்து இணைய காப்பகத்தில் (https://archive.org) இணைக்க வேண்டும். இரகசியமாகப் பூட்டப்பட்டிருக்கும் தரவுகளை வாங்கி இணையத்தில் இணைக்க வேண்டும். அறிவியல் இதழ்கள், புத்தகங்கள், ஆராய்ச்சி முடிவுகளை பதிவிறக்கம் செய்து அவற்றை டொரன்ட் (Torrent) போன்ற கோப்புகளை பகிரும் பிணையத்தில் சேர்க்க வேண்டும். ஓப்பன் ஆக்சஸ் கொரில்லா யுத்தத்தை நாம் நடத்த வேண்டும்.

உலகம் முழுவதும் நம்மைப் போன்றோரின் இச்செயலால், அறிவு என்பது தனியுடைமை ஆக்கப்படுவதை எதிர்ப்பது மட்டுமின்றி அது ஒரு பழங்கதையாக்கி புது சரித்திரம் படைப்போம். நீங்களும் இதில் பங்கெடுப்பீர்களா?

ஆரோன் ஸ்வாட்ஸ், ஜூலை 2008, எரேமோ, இத்தாலி

© Prasanna Venkadesh. Creative Commons Attribution ShareAlike. Theme by Giulio Fidente on github.