Index ¦ Archives ¦ Atom

நாம் தேர்ந்தெடுக்காத போட்டி

ஒரு குழந்தை பிறந்த உடன் அதனை சுற்றியிருக்கும் ஒவ்வொருவரும் அதன் வரவை கொண்டாடுகின்றனர். அக்குழந்தை பிறக்கும் போது, அதற்கு இயற்கையை புரிந்துக் கொள்ள தெரியாது, கண்களை உருட்டி உருட்டி பிரம்மிப்போடும் ஆச்சர்யத்தோடும் இந்த பொருள்வயப்பட்ட உலகை முதன் முதலில் காண்கிறது. நாட்கள் செல்ல செல்ல மெதுவாக அதன் பெற்றோர் அதற்கு ஒவ்வொன்றாக கற்றுக் கொடுக்கின்றனர்.

இதில் முக்கியமானது, அக்குழந்தைக்கு கற்பிக்கப்படும் அனைத்தும் அதனை கற்றும் கொடுப்போரின் புரிதலிலிருந்தே வருகிறது. அதனால் தான் கடவுள் நம்பிக்கையின் மீதான என்னுடைய முதல் வாதம், அது அவர்களின் விருப்பம் இல்லாமலே, புரிதல் இல்லாமலேயே அதன் மீது திணிக்க்பபடுகிறது என்பது. மதம், சாதி, இனம், மொழி இப்படி அனைத்துமே தான் தேர்ந்தெடுத்ததல்ல என்பதை உணர நெடுங்காலம் தேவைப்படுகிறது அக்குழந்தைக்கு (அதுவும் சரியான வழிகாட்டுதல் இருந்தால் மட்டுமே).

பள்ளிக்கு செல்லும் பருவம் வரும் பொழுது, சில குழந்தைகள் அழுகிறது. சில குழந்தைகள் மிகவும் மகிழ்கிறது. அழுவதற்கு காரணம், புதிய சூழல், புதிய மனிதர்கள் என்ற பயம். மகிழ காரணமும் அதுவே தான். தன் வயதை உடைய பலரை சந்திக்கப்போகிறோம், புதிய நண்பர்கள், புதிய விளையாட்டுகள், கூட்டாக சேர்ந்து நேரத்தை செலவிடுதல் என்ற மகிழ்ச்சி ஒரு சில குழந்தைகளிடம். புதிய நண்பர்கள் தன்னை ஏற்றுக் கொள்வார்களா? தன்னையும் விளையாட்டில் இணைத்துக் கொள்வார்களா இல்லை ஒதுக்கி விடுவார்களா என்கின்ற பயம் ஒரு சில குழந்தைகளிடம்.

தனிமைப்படுத்துதல் என்பது எவ்வுளவு கொடூரமானது என்பது அக்குழந்தைக்கு மிக நன்றாக யாரும் விளக்காமலேயே அதற்கு புரிகிறது. ஏனெனில், மனிதன் ஒரு சமூக விலங்கு. எதையும் கூட்டாக செய்வதே அதற்கு சிறப்பு. ஒரு பள்ளியின் முக்கிய கடமை இவ்வாறு பயத்தோடு இருக்கும் குழந்தைகளின் பயத்தையும் தயக்கத்தையும் சிறிது சிறிதாக தகர்த்து அனைவரோடும் பழக வழி வகுக்க வேண்டும் (பாலின பாகுபாடு இல்லாமல்). அனைத்து குழந்தைகளுக்கும் கூட்டுறவு மற்றும் கூட்டு முயற்சியின் பலன்களை புரிய வைக்க வேண்டும்.

அப்படி இல்லாமல் வணிகமயமாகிப்போன தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தில் பள்ளிக் கூடம் என்பது ஒரு தொழிற்சாலை அல்லது இராணுவ கிடங்கு போலவும், குழந்தைகள் தொழிலாளிகள் அல்லது இராணுவ வீரர்கள் போல் கட்டளைகளை பின்பற்றுபவர்களாக மாற்றப் படுகிறார்கள். ஏற்கனவே அச்சத்தில் இருக்கும் குழந்தைக்கு இது மேலும் அச்சத்தைக் கூட்டுகிறது. மகிழ்ச்சியாய் வந்த குழந்தைக்கு ஏமாற்றம் அதிர்ச்சியளிக்கிறது.

இக்குழந்தைகள் ஒன்றாக இணைந்து கூட்டுமுயற்சியின் மூலம் ஒருவருக்கொருவர் கற்றுக் கொடுத்தல், இலக்கை அடைதல் என்பதற்கு பதிலாக, முதன் முதலில் இவ்விடத்தில் இவர்களுக்குள் போட்டி உருவாக்கப்படுகிறது. நீ அதிக மதிப்பெண் எடுத்து முதலில் வர வேண்டும் என்கிற கருத்து திணிக்கப்படுகிறது. இக்குழந்தைகள் நாம் அனைவரும் போட்டி போடத்தான் பள்ளிக்கு வருகிறோம் என்று சேர்த்து விடும் பொழுது நினைத்தார்களா? அல்லது போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் கேட்கப் படுகிறதா? இப்படித்தான் நீயும், நானும், நாம் தேர்ந்தெடுக்காத ஒரு போட்டிக்குள், தள்ளப்படுகிறோம்.

10th, 12th மட்டும் கஷ்டப்பட்டு படிச்சுட்டனா, அதுக்கப்பறம் காலேஜ் லைஃப் ஜாலி தான்

இந்த வாக்கியத்தை கேட்டிறாதவர் யாரும் இருக்க முடியாது. கல்லூரி படிப்பில் தற்போது இருப்பவர்களுக்கும் சரி, முடித்தவர்களுக்கும் சரி, அவ்வாக்கியத்தின் உண்மை தன்மை மிக நன்றாகவே தெரியும். இப்போட்டி கல்லூரியிலும் தொடர்கிறது. ஆனால் மதிப்பெண்களை காட்டிலும் வேலைவாய்ப்புக்காண போட்டியே இங்கு அதிகம்.

"வேலை கிடைச்சாச்சுனா லைஃப் செட்டில்"

என்று கல்லூரி ஆசிரியர்கள் முதற்கொண்டு அனைவரும் சொல்லியிருப்பார்கள். பாவம் அந்த கல்லூரி ஆசிரியர்கள், அவர்களுக்கு கிடைத்த வேலையிலேயே அவ்வுளவு போட்டி, பொறாமை, ஈகோ பிரச்சனைகளை ஒருவொருக்கொருவர் வைத்துக் கொண்டு நமக்கு கீதா உபதேசம் செய்கிறார்கள்!

வேலை கிடைத்துவிட்டால் அதை தக்க வைத்துக் கொள்ளப் போட்டி. தக்க வைத்துக் கொண்டால் அடுத்த படிநிலைக்கு பயணிக்கப் போட்டி. வேலை கிடைக்காதவர்கள் தனிமைப் படுத்தப் படுகிறார்கள். தனிமைப்படுத்துதல் என்பது ஒரு குழந்தைக்கே தெரியும் எவ்வுளவு கொடுமையானது என்று. அதனால் தான் வேலை கிடைக்காமல் இருப்பவர்கள் தனிமையாக உணர்கிறார்கள். இது அவர்களின் தவறே இல்லை. இப்படி வாழ்க்கை முழுவதும் தான் தேர்ந்தெடுக்காத, ஒப்புக்கொள்ளாத ஒரு போட்டியிலும், போட்டியின் விதியையும் பின்பற்றி என்ன தான் சாதிக்கிறோம்? இயற்கையில் மனிதன் ஒரு சமூக விலங்கு எனில், கூட்டுமுயற்சிக்கு பதிலாக ஏன் தனிமனித அடையாளத்திற்குள் சிக்கி போட்டி, பொறாமை என்று அடுத்தவரை மட்டம் தட்டி கீழே தள்ளி, எட்டி உதைத்து ஏணியின் உச்சியில் ஏறுகிறோம்? கூட்டுமுயற்சி தோற்றுவிட்டதா?

நிச்சயம் இல்லை. கூட்டுமுயற்சிக்கு இடமே அலிக்காமல், ஒருவருக்கொருவர் நேர் எதிராக நிறுத்தி வைக்கப்பட்டு களத்தில் போட்டி போட வைக்கும் விதியின் கீழ் கட்டப்பட்டுள்ளது. இவ்விதிகளுக்கு நம்மிடம் ஓப்புதல் கேட்கப்படுவதில்லை, விதிகளை மாற்ற நமக்கு அதிகாரமே கொடுக்கப்படவில்லை. Discipline என்ற பெயரில் கட்டளைகளை கேள்வி கேட்காமல் ஏற்கும் இயந்திரங்களாக மாற்றப்படுகிறோம். இவற்றையெல்லாம் யார் செய்கிறார்கள்?

உங்களிடம் கேட்டால் உங்கள் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், மேனேஜர் மற்றும் முதலாளியின் பெயர்களை சொல்வீர்கள். இவ்விதிகள் அனைத்து இடத்திற்கும் பொருந்துகிறது. அடிப்படையில் பள்ளியில் தொடங்கி வேலை அல்லது தொழிலில் முடியும் இந்த விளையாட்டிற்கு, விதிகளை கட்டமைப்பவர்கள் நம் கண்களுக்கு குறிப்பாக பள்ளி பருவத்திலும், கல்லூரி பருவத்திலும் தெரியவே மாட்டார்கள். வேலை பருவத்தில் இந்த "Invisible Hand" என்பவர்களை கூட பல நேரங்களில் அடையாளம் காண்பது கடினம், ஏனெனில் அவர்கள் விதிகளை உருவாக்கி நமக்குள் மோதலை உருவாக்கிவிட்டு வெளியே நின்று பார்க்கிறார்கள். தொழிலில் சென்று முடியும் இந்த விளையாட்டில், பணியிடங்களுக்குச் சாதகமான, கேள்விக் கேட்காத, மிகச் சிறிதளவு கூட்டு முயற்சியுடன் (அதுவும் அவர்களுக்கு தேவையான அளவு மட்டும்) கட்டளைகளை அப்படியே பின்பற்றுகிற நபர்களே தேவை. அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? ஒவ்வொரு தலைமுறையிலிருந்தும் வருகிறார்கள். அப்படியானால், ஒரு தலைமுறை உருவாகும் போதே நமக்குத் தேவையான பணியாளர்களை உருவாக்குவதே சிறந்த திட்டம் என்று சப்தமில்லாமல் உருவாக்குவது இந்த முதலாளி வர்க்கமே. தன் வர்க்க நலன்களை பாதுகாக்க அது ஏற்படுத்தியுள்ள விதிகள் தான் இவை.

சற்று சிந்த்தித்துப் பாருங்கள் கூட்டு முயற்சியின் மூலம், மனித மாண்புகளை இழிவு படுத்தாமல், யாரையும் தனிமைப்படுத்தாமல், என் சொத்து, உன் சொத்து என்று சண்டையிடாமல், அனைவருக்கும் பொதுவான இந்த பூமியை, இயற்கையை கூட்டாக பயன்படுத்துவதில், பாதுகாப்பதில், நம் தேவைகளை பிறர் உதவியோடும், பிறர் தேவைகளை நம் உதவியோடும் பூர்த்தி செய்து கொள்வதில் என்ன சிக்கல் இருக்கிறது? நமக்கான விதிகளை நாம் தான் உருவாக்க வேண்டும். அதுவும் கூட்டு முயற்சியின் மூலம். #Cooperatives #Commons #Communes

இந்த வரிசையில் Paulo Friere எழுதிய Pedagogy of the Oppressed என்னும் புத்தகத்தை நீண்ட காலமாக படிக்க வேண்டும் என்று என் காத்திருப்புப் பட்டியலில் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறது.

© Prasanna Venkadesh. Creative Commons Attribution ShareAlike. Theme by Giulio Fidente on github.