Index ¦ Archives ¦ Atom

தெரிந்தும் தெரியாமலும்

"ஏதாவது படத்துக்கு போகலாமா?"

என்று என் அண்ணனிடம் கேட்டேன்.

"டேய்.. நானே கேட்கலாம்னு நெனச்சுட்டு இருந்தேன்"னு

பதில் சொன்னான்.

"சரி, என்னென்ன படம் ஓடிட்டு இருக்கு-னு பாரு. போகலாம்"

என்றேன். சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே கையில் இருந்த தன்னுடைய ஸ்மார்ட்ஃபோனை எடுத்து தேய்த்துக் கொண்டிருந்தான். தேடும் படலத்தில் என்னையும் இணைத்துக் கொண்டேன்.

"ரெமோ, இருமுகன், ஆண்டவன் கட்டளை..." என்று படத்தின் பெயர்களையும் அவற்றின் மதிப்பீடு எண்களையும் வாய்விட்டு சொல்லியவாரே கடந்து கொண்டிருந்தான். நான் அவனிடம் கேட்டேன், நீ கடைசியாக பார்த்த படம் என்னவென்று, உடனே அவன்

"டேய் நா படம் பாத்து ரொம்ப நாள் ஆச்சுடா, கடைசியா கபாலி தான் நா பாத்தது. அங்க (பெங்களூர்ல) காவிரி சிக்கலால, தமிழ் படம் எதுவுமே தேட்டர்ல ஓடல டா"

என்றான்.

"ஆண்டவன் கட்டளை போலாமா?" என்றேன்.

உடனே ரேட்டிங் பார்த்து,

"நல்ல ரேட்டிங் தான்"

என்றான்.

"நான் ஏற்கனவே பாத்துட்டேன், இருந்தாலும் நீ பாக்கலல... அதனால அந்த படத்துக்கு போரதுனா போகலாம்"

என்றேன். அவனும் சரி என்று உடனே புக் பண்ணிட்டான்.

சமீபத்தில் மனநல மருத்துவர் ஷாலினி அவர்களின் ஒரு நேர்காணலை பார்க்க நேர்ந்தது. அதில் தமிழில் வெளியாகும் கமெர்ஷியல் சினிமா மற்றும் மாஸ் அல்லது அதிரடி நாயகர்களின் திரைப்படம் எப்படி பெண் அடிமை கருத்துக்கள் மற்றும் பாலியல் சீண்டல்களை கையாளுகிறது என்பதைப் பற்றி சிறப்பாக பேசியிருந்தார்.

ரெமோ போன்ற படங்கள் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை படம் வெளிவந்த நாளே சிலருடைய பதிவை பார்த்தவுடன் புரிந்துக் கொள்ள முடிந்தது. எனவே, இருந்த பட்டியலில் எடைப் போட்டு பார்க்கும் போது, ஆண்டவன் கட்டளையை நான் பரிந்துரை செய்தேன்.

அரசு சேவைகளை பெற இடைதரகர்களை அணுகுவது மூலம் ஏற்படும் பாதிப்புகள், சொந்த ஊரை விட்டு சென்னைக்கு தங்கள் உழைப்பை மூலதனமாக கொண்டு வரும் இளைஞர்கள் வாடகைக்காக வீடு தேடி அலையும் படலம், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் அத்யாவசிய பொருட்களின் விலை ஆகியவை பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது தான் படத்தின் மையம் என்றாலும், அதில் வரும் நாயகி கலாச்சார பெண் என்ற அடிமைக் கருத்துக்களை உடைத்தெரியும் ஒருவராக வந்திருக்கிறார். வேற யாரு... இறுதி சுற்று-ல தெரிக்க விட்ட ரித்திக்கா சிங் தான். வாழ்க ஒரு ஒட்டகம், யாரோ பெத்த புள்ள, இம்சை ராணினு ஆரம்பிக்கும் மூன்று பாடல்களையும் திரும்ப திரும்ப கேட்டாலும் நல்லா இருக்கு.

படத்தை முதலில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததிற்கு காரணம் என்னுடைய நண்பன் Nisharth. ஒரு நாள், என்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது இப்படத்தை பார்த்ததாகவும், அதைப் பற்றி எனக்கு சொன்னான். அவன் சொன்னதில்,

"படத்துல ஒரு இலங்கை தமிழர் ஒருத்தரையும் காமிச்சாங்க. அவரோட குடும்பத்த தொலச்சிட்டு தேடுவாரு. இப்படியெல்லாம் கஷ்டப் படுத்தினா.. போராளிகள் உருவாகாம என்ன பண்ணுவாங்க?"

என்று அழுத்தமாக அவன் சொன்னதே இப்படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. பார்த்தேன்.

"நேசா... ஒரு பாட்டு ஒண்ணு பாடு" என்று எங்கே தான் பேசினால் இவர் இலங்கை தமிழர் என்று தெரிந்து விடுமோ என்பதற்காக ஊமையாக நடிக்கும் இவரிடம் யோகி பாபு கேட்க.

"மன்னிச்சுக் கொள்ளுங்கள் அடா... உங்களை ஏமாத்தனம் என்று நான் ஊமை போல் நடிக்க இல்ல. என்ட குடும்பத்த கண்டுபிடிக்கிறதுக்காகத்தான் நான் நடிச்சன். நான் ஶ்ரீலங்கன், யுத்த காலத்துல பெஞ்சாதியும் மகளும் நானும் அங்கிருந்து தப்பிச்சி, போட்டு மூலமா தமிழ்நாட்டுக்கு வந்தம். வந்த அன்னைக்கே ரெண்டு பேரையும் துலச்சி போட்டன். இன்றைய நாள் வரைக்கும் தேடிக் கொண்டிருக்கன்... இன்னும் கிடைக்க இல்ல. நாங்களே அகதிகள், நாங்கள் கம்ப்ளெயின் பண்ணி போஸ்டர் அடிச்சு. ம்ஹூம்... போலீசு பிடிச்சால் அகதி முகாமில் போட்டுவிடினும்" என்று காரணம் கூறும் நேசனின் முகம் என் கண்ணையும் மனதையும் விட்டு விலக மறுக்கிறது.

அதே போல் இறுதியில், போலீசிடம் மாட்டிக்கொள்ளும் நேசன், விஜய் சேதுபதியை அழைத்து தன்னுடைய மனைவி குழந்தையுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கொடுத்து, "என்றைக்காவது இந்த பெஞ்சாதி பிள்ளைகள பாத்த நீ என்றால் நான் தேடிக் கொண்டிருத்தன் என்று சொல்லு.. என்ன?" என்று கண்ணீருடன் இருவரும் அணைத்துக் கொண்டு ஒரு சிறு புன்னைகையோடு காட்சியிலிருந்து நம் கண்களிலிருந்தும் மறைந்தாலும் மீண்டும் நம் மனம் அவரை மறக்க மறுக்கிறது.

இலங்கைத் தமிழராக இருந்தாலும், காஷ்மீரியாக இருந்தாலும் இவர்களை வாட்டி வதைக்கும் அரசுகள் தங்கள் பயங்கரவாத செயல்களை நிறுத்தாத வரையில் போராளிகள் ஏன் உருவாகிறார்கள் என்கிற கேள்விக்கு விடை தெரிந்தே நாம் விடை தெரியாதது போல் சுற்றிக் கொண்டிருக்கிறோம்.

© Prasanna Venkadesh. Creative Commons Attribution ShareAlike. Theme by Giulio Fidente on github.